என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வரும் 24-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்- சபாநாயகர்
- சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
- 22, 23-ந்தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும்.
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.
அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்ததை மறுத்து ஆளுநர் வெளியேறினார்.
ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார் இதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சபாநாயகர் கூறியதாவது:
வரும் 24-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். நாளை மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்படும்.
22, 23-ந்தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும். 24-ந்தேதி ஆளுநர் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதில் அளிப்பார். சனிக்கிழமை முதலமைச்சர் உரையுடன் நிறைவு பெறும் என்று கூறினார்.






