ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக் ஆஜராகவில்லை - அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரம்

வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகிய 2 பேருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் பிறப்பித்தனர்.
Senthil balaji  - Ashok kumar
Published on

த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆஜராகாததால் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, திரைமறைவில் அரங்கேறிய சதித்திட்டம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

ரூ.35 கோடி பேரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு புகார் மனுவை சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்திருந்தார்.

இந்த புகார் மனுவில், அவர் கூறிய தகவல்கள் அடிப்படையில் அவரிடம் பேரத்தில் ஈடுபட்டதாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ், கார்த்தி, சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த செல்வன், மணப்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சீனிவாசன், அஸ்தினாபுரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று கைதானவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில்தான் இந்த பேரத்தை நடத்தியதாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் போலீசாரின் கைது நடவடிக்கையில் சிக்காமல் இருக்க தலைமறைவு ஆனார்கள்.

லுக் அவுட் நோட்டீஸ்

அவர்கள் 2 பேரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட் நோட்டீசை திருவல்லிக்கேணி போலீசார் அனுப்பினார்கள். இதனையடுத்து விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகிய 2 பேருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் பிறப்பித்தனர்.

இந்த சம்மனை, கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சென்று, அவரது பெற்றோர் வேலுசாமி-பழனியம்மாளிடம் வழங்கினார்கள்.

இன்று ஆஜராவாரா?

அந்த சம்மனில் அவர்கள் 2 பேரும் இன்று காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் அவர்கள் 2 பேரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 பேரும் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.

சட்ட நடவடிக்கை

இதனால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரி மீண்டும் 2-வது முறையாக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதனை ஏற்று ஆஜராகாத பட்சத்தில், நீதிமன்ற பிடியாணை பெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். வெளி நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கில் அரசியல் தொடர்புகள், பணப்பரி மாற்றம், பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை போலீசார் தங்களின் தேடுதல் வேட்டையை கரூரில் நேற்றுடன் நிறைவு செய்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

முதலமைச்சர் விஜய் வருகிற 10-ந் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என்பதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com