என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவளம் நன்னீர் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்- சீமான் கோரிக்கை
    X

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவளம் நன்னீர் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்- சீமான் கோரிக்கை

    • இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது.
    • சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், இப்பகுதியில் உள்ள 4375 ஏக்கர் பரப்பளவிலான உப்பங்கழி மற்றும் தாழ்வான நிலப்பகுதியைச் சுற்றி 30.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் கரைகளை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது. நன்னீர்த் தேக்கத் திட்டங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதும் பூமித்தாயின் நலனுக்கு இன்றியமையாததும் ஆகும். இருப்பினும் மேற்குறிப்பிட்ட இடத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் பின்விளைவுகளை அரசு ஆராய்ந்திட வேண்டியது அவசியமாகும்.

    இத்திட்டம் அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும், 16-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டமாகும்.

    சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாருதல், பயன்பாட்டில் இருக்கும் நன்னீர்த் தேக்கங்களில் கழிவு நீர் மற்றும் குப்பை கலக்காது வழிவகுத்தல் மற்றும் கால்வாய்களைப் பராமரித்தாலே அதிக அளவில் நன்னீரைச் சேமிக்க முடியும். உப்பங்கழிகளை அழிக்காமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிறு ஏரிகளை ஆழப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கலாம். வளர்ச்சி என்பது நிலத்தையும், வளத்தையும் மேலும் அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களையும் உள்ளடக்கியது.

    16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச் செல்லும். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×