‘கூட்டணியில் இடப்பகிர்வு கட்சிகளின் சமூக அடையாளங்களை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன’ - திருமாவளவன்

கூட்டணியில் கட்சிகளின் "கருத்தியல் வலிமை" ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகவுள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘கூட்டணியில் இடப்பகிர்வு கட்சிகளின் சமூக அடையாளங்களை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன’ - திருமாவளவன்
Published on

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

8 தொகுதிகளில், 6 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரட்டை இலக்கத்தில் விசிக தரப்பில் தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தரப்பில் 8 தொகுதிகளே தரப்பட்டன.

இது உள்ளுக்குள் வருத்தத்தை ஏற்படுத்தினாலும், எதிர்தரப்பு கூட்டணிக்கு நன்மை அளிக்கும் விதமாக எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக விசிக அமைதியாக இருந்துவருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் இதே நிலையில்தான் உள்ளது.

இந்நிலையில் கூட்டணியில் இடப்பகிர்வு பெரும்பாலும் கருத்தியல் வலிமையை கொண்டு முடிவு செய்வதில்லை என தனது மனக்குமறலை வெளிப்படுத்தியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,

“கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அளவீடுகளில் வாக்கு வங்கி வலிமைதான் முதன்மையானதாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வரையறைகளுக்கு உட்படாத சில கட்சிகளை அவற்றின் சமூக அடையாளங்களை பின்னணியாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், கட்சிகளின் "கருத்தியல் வலிமை" ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகவுள்ளது.

தொகுதிப் பங்கீடு நடக்கிறபோது ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதி எண்ணிக்கைகள் எத்தகைய வரையறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அவ்வப்போது நிலவும் அரசியல் சூழல்களைப் பொறுத்து அமைகின்றன.

அத்துடன், கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் அணுகுமுறைகளைப் பொறுத்தும்; கூட்டணியின் தலைமை கையாளும் அரசியல் உத்திகளைப்பொறுத்தும் இடப்பகிர்வுகள் நிகழ்கின்றன.

கூட்டணிக்குத் தலைமை வகிப்பவரின் நிலையிலிருந்து ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி, அனைத்துக் கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டியது கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சிக்குமுள்ள பொறுப்பாகும்.

கொள்கைப் பகையை வீழ்த்துவதும், கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வதும் ஒவ்வொரு கட்சியின் கடமை. ஆனால், அந்தக் கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு வெற்றிக்கான உத்திகளை வகுக்கவேண்டியது தலைமைக்குரிய தவிர்க்கமுடியாத பொறுப்பாகும்.

கருத்தியல் வலிமையை இன்றியமையாத ஒரு அளவுகோலாகக் கொண்டு இடப்பகிர்வு உள்ளிட்ட அணுகுமுறைகளைக் கையாள வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகவுள்ளது.

கருத்தியல் உறுதிப்பாடு கொண்ட , நம்பகத்தன்மை வாய்ந்த தோழமை சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமே கொள்கைப் பகையை இம்மண்ணில் வேரூன்ற விடாமல் தடுக்க முடியும். அத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட இடதுசாரி தோழமை சக்திகளை அரவணைப்பதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கவேண்டியதும் அவர்களை வலுப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

அதன்மூலம் ஒட்டுமொத்த கூட்டணிக்குமான நன்மதிப்பு மக்களிடையே பன்மடங்காகப் பெருகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com