பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் 45 நாட்கள் கோடை விடுமுறை

விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்.
பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் 45 நாட்கள் கோடை விடுமுறை
Published on

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு இந்த மாதம் 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக தேர்வு நடைபெற்றது.

இன்றுடன் தேர்வு நிறைவடைவதால் நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை 45 நாட்கள் கிடைக்கிறது. சட்டசபை தேர்தல் நடப்பதால் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்கள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட வேண்டி இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால் தேர்வு முன்கூட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு கோடை விடுமுறை 45 நாட்கள் விடப்பட்டு இருப்பதால் உற்சாகமடைந்து உள்ளனர். அதே நேரத்தில் இந்த விடுமுறை நாட்களில் மாணவர்கள் பாதுகாப்புக்காக இருக்க வேண்டும் என்று சில முக்கிய அறிவுரைகள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிக அளவு தண்ணீரை அருந்த செய்யுங்கள். சூரிய ஒளி தாக்காமல் இருக்க மாணவர்கள் தொப்பிகளை பயன்படுத்த அறிவுறுத்தவும். உச்ச சூரிய வெப்ப நேரத்தில் வெளியே செல்வதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.

ஆபத்தான பொருட்களை மாணவர்களின் பார்வையில் படாதவாறு பாதுகாப்பாக வைக்கவும், மாணவர்கள் நீர் நிலைகளில் நீச்சல் தெரியாமல் சென்று குளிக்க முற்படும்போது நீரில் மூழ்க வாய்ப்பு உள்ளது.

எனவே விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநிலை பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். தனிமை உணர்வுகளை தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்றவற்றின் மூலம் சமூகத் தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநலனை பேணவும் முடியும். தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்ப்பதில் அதிகமான நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

கோடை காலத்திற்கு ஏற்ற பழ வகைகளை மாணவர்களுக்கு வழங்கவும் பெற்றோர்கள் மாணவர்களை அருகாமையில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களை படிக்க ஊக்குவிக்கவும். அவர்களின் ஆர்வங்களை பொறுத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறுவர் கதைகள், நீதி நூல்கள் மற்றும் பெருந்தலைவர்கள் பற்றிய நூல்களை படிக்க அறிவுறுத்தவும்.

இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com