காருக்குள் கருகிய நிலையில் 4 உடல்கள் மீட்பு - சம்பவ இடத்தில் தடயவியல் துறை ஆய்வு

காருக்குள் கருகிய நிலையில் 4 உடல்கள் மீட்பு - சம்பவ இடத்தில் தடயவியல் துறை ஆய்வு
Published on
Summary

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் காருக்குள் கருகிய நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் இருந்து கல்லுவிளை செல்லும் சாலையில் பனங்காடு பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் ஒரு பனைமரத்துக்கு கீழ் இன்று காலை கார் ஒன்று எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்த நிலையில் நின்று கொண்டிருந்தது.

இதனை அந்த வழியாக வயக்காட்டுக்கு சென்றவர்கள் பார்த்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அந்த காரில் உள்பகுதி இருக்கைகளில் உடல்கள் எரிந்த நிலையில் இருந்தது. தகவல் அறிந்து வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேசன் விரைந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது காரின் டிரைவர் இருக்கையில் ஒரு உடலும், பின் இருக்கைகளில் 3 உடல்களும் முற்றிலும் தீயில் எரிந்த நிலையில் இருந்தது.

மேலும் அவர்கள் வந்த காரும் முற்றிலும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து கரிக்கட்டையாகி இருந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு சென்று தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் வந்தவர்கள் யார்? இச்சம்பவம் கொலையா? தற்கொலையா? அல்லது காரில் வந்தவர்கள் இரவில் தூங்கியபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்து 4 பேரும் இறந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் சென்று விசாரணை நடத்தி வருகிறார். காரின் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சம்பவம் நடந்த இடமானது சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள பனங்காட்டு பகுதியில் உள்ளது.

காரில் டிரைவர் இருக்கையில் ஆண் ஒருவரும், பின் இருக்கைகளில் ஒரு பெண் நடுவிலும், 2 குழந்தைகள் அந்த பெண்ணின் இடது மற்றும் வலது புறத்திலும் இருப்பது போன்று தடயங்கள் சிக்கி உள்ளது. இதனால் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தினராக இருக்கலாம். அதாவது கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் என இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதே நேரத்தில் காரின் சாவி ஆன் செய்த நிலையில் இருக்கிறது. மேலும் காரின் டிரைவர் இருக்கையானது சாய்ந்த நிலையில், அதாவது ஓய்வெடுக்கும்போது இருக்கையை சாய்த்து விட்டு டிரைவர் தூங்குவது போல் இருக்கிறது. இதனால் நெடுந்தூர பயணமாக காரில் வந்தவர்கள் தூக்க கலக்கத்தினால் ஓரமாக காரை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தபோது ஏ.சி. கசிவால் தீப்பற்றி எரிந்து இறந்திருக்கலாமா என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இவ்வாறாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி இறந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதிகாலையில் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட காரில் 4 உடல்கள் கரிக்கட்டையாக கிடக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com