விஜயபாஸ்கர் அ.தி.மு.க. மூலம் குவித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவாரா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி

10 ஆண்டுகளாக நீங்கள் அவர் காதை கடிச்சு, காலை பிடித்து, எத்தனை எத்தனை விஷயங்களை நீங்க செய்தீர்கள். இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா?
ஆர்.பி.உதயகுமார்
Published on

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை கண்டிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-

அ.தி.மு.க. மூலம் அடையாளம் கொடுத்து, அதிகாரம் கொடுத்து, முகவரி கொடுத்து, வாழ்வு கொடுத்து, தங்களை ஆளாக்கிய கட்சியை காப்பாற்ற வேண்டிய இந்த சோதனையான நேரத்திலே கட்சி சரியில்லை, தொண்டர்கள் சரியில்லை, தலைமை சரியில்லை என்று அவதூறுகளை அள்ளித் தெளித்துக் கொண்டே இருந்தால் தொண்டர்கள் இனியும் எப்படி பொறுத்துக் கொள்வார்கள். டாக்டர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து தன்னுடைய நாடகத்திற்கான விடை கொடுத்து இருக்கிறார். இது வளர்த்த கடா மார்பில் பாய்வது போல ஒரு வேதனையை தான் தலைமைக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கட்சிக்கு விஜய பாஸ்கர் வருவதற்கு முன்பாக தனக்கும், தன் குடும்பத்திற்கும் இருந்த சொத்துபத்துகளையும் இப்போது விஜயபாஸ்கர் வைத்திருக்கிற சொத்து பத்துக்கள் முதலீடுகளை எல்லாம் அவர் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு வேறு கட்சிக்கு போவாரா? இது தொண்டர்களுடைய எதிர்பார்ப்பு.

கட்சியில் வாங்கிய பதவி வேண்டாம், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வேண்டாம் என ராஜினாமா செய்து விட்டு போய்விட்டீர்கள். அதனால் நியாயப்படி நீங்கள் கட்சியில் சேர்வதற்கு முன்பு இருந்த நிலையில் தானே வேற கட்சிக்கு போக வேண்டும். இந்த கட்சியில் எல்லாம் ஆண்டு அனுபவிப்பீர்கள், சொத்து பத்துகளை சேர்த்து முதலீடு செய்தீர்கள், செல்வாக்கை சேர்ப்பீர்கள். எல்லாம் சேர்த்த பிறகு தலைமையும் விமர்சிப்பீர்கள். தொண்டர்களை கைவிட்டு, மக்களை கைவிட்டு, உங்கள் சுயநலத்திற்காக உங்கள் முதலீடைக் காப்பாற்ற, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீங்கள் கட்சியை காட்டிக் கொடுத்தால் தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்.

எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சி, அம்மா வளர்த்த கட்சி, இன்றைக்கு சாமானியர் எடப்பாடியார் கட்சியை நடத்தி வருகிறார். தலைமை சரி இல்லை என்று பதிவு போடுகிறீர்கள், எப்போது போடுவது?

10 ஆண்டுகளாக நீங்கள் அவர் காதை கடிச்சு, காலை பிடித்து, எத்தனை எத்தனை விஷயங்களை நீங்க செய்தீர்கள். இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா? இப்படி நீங்க போனால் நாங்கள் வாய் மூடிக்கொண்டு மவுனமாக பார்த்துக்கொண்டு இருக்கணுமா? உண்மை தொண்டர்கள் எல்லாம் ஏமாளிகளா, விஜயபாஸ்கருக்கு என்ன கேடு வந்தது?

மனசாட்சி இல்லையா?

அ.தி.மு.க.வில் சேரும் முன்பு உங்கள் குடும்பத்தை பற்றி இந்த நாட்டுக்கு யாருக்காவது தெரியுமா? எந்த எதிர்பார்ப்பும் இன்றி அதிகாரத்தை பார்க்காமல், பதவி சுகத்தை பார்க்காமல், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் எதிர்காலத்தை நீங்கள் கேள்விக்குறியாக்கி விட்டு நீங்கள் சென்று உள்ளீர்கள்? நீங்கள் தான் தோன்றித்தனமாக செய்யலாமா? உங்களுக்கு மனச் சாட்சி இல்லையா? அம்மா ஆன்மா, எம்.ஜி.ஆர். ஆன்மா உங்களை சும்மா விடுமா?

கட்சிக்கு ஒரு தோல்வி வந்தபோது காப்பாற்ற வேண்டிய நேரத்தில் கட்சியை காட்டி கொடுத்துவிட்டு ஓடுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? தொண்டர்கள் கொதித்து எழுந்தால் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள். 54 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் எந்த பதவியும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறானே தொண்டன் அவர்களை நம்பி தான் கட்சி இருக்கிறது தவிர, உங்களைப் போன்றோரை நம்பி இந்த கட்சி இல்லை.

இந்த இயக்கத்தை வழி நடத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கிறார். அதையெல்லாம் கேள்விக்குறியாக்கும் வகையில் உங்கள் நடவடிக்கை உள்ளது. சொந்த கட்சியில் ஜெயித்தால்தான் அமைச்சராக முடியும், வேறு கட்சியில் அமைச்சரானால் மதிக்க மாட்டார்கள். த.வெ.க. நல்ல கட்சி என்றால் தேர்தலுக்கு முன்பாக சேர்ந்து இருக்க வேண்டாமா? ஏன் தேர்தல் பின்பு த.வெ.கவில் சேருகிறீர்கள்?

தலைமை சரியில்லை என கருத்து சொல்லி நாடகமாடி கட்சி தொண்டர்கள் நலனையும், கட்சியின் எதிர்காலத்தையும் காவு கொடுத்து விட்டு தங்களுடைய வாழ்வாதாரம் மட்டுமே முக்கியம் என்று கட்சி தாவுகிற நடவடிக்கை இனிமேல் தொடர்ந்தால் தொண்டர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை எச்சரிக்கைக்காக சொல்லுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com