போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்! - ராமதாஸ்

தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படும்போது மட்டுமே அவர்களிடம் பணியாற்றும் உற்சாகமும், அர்ப்பணிப்பு உணர்வும் மேலும் அதிகரிக்கும்.
போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்! - ராமதாஸ்
Published on

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மத்திய அரசு, விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி (DA) உயர்வை அறிவித்து, அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமத காலத்திற்கான நிலுவைத் தொகையையும் உடனுக்குடன் வழங்கி வருகிறது. அதேபோல், தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தி, அதற்குரிய நிலுவைத் தொகைகளையும் வழங்கி வருகிறது.

ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மட்டும் இந்த நடைமுறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படி உயர்வுகள் பெரும்பாலும் தாமதமாக அமல்படுத்தப்படுவதுடன், அதனால் உருவாகும் நிலுவைத் தொகைகளும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டு, 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில், அது தாமதமாக 2026 மே 1 முதல் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதுபோன்ற நிலை கடந்த காலங்களிலும் ஏற்பட்டுள்ளதுடன், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகைகளும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகளை தாங்கி நிற்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அவர்களின் நியாயமான பொருளாதார உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் இப்பிரச்சனையை மனிதநேய அடிப்படையிலும் தொழிலாளர் நலன் அடிப்படையிலும் மறுபரிசீலனை செய்து, இதுவரை வழங்கப்படாமல் உள்ள அனைத்து அகவிலைப்படி நிலுவைத் தொகைகளையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இனிவரும் காலங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் ஒவ்வொரு அரையாண்டிலும், அதற்குரிய நிலுவைத் தொகைகளையும் சேர்த்து உடனடியாக வழங்கும் நடைமுறையை அரசு உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படும்போது மட்டுமே அவர்களிடம் பணியாற்றும் உற்சாகமும், அர்ப்பணிப்பு உணர்வும் மேலும் அதிகரிக்கும்.

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து, நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகைகளை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com