

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் எல்லா கட்சிகளிலும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் இதுவரை தலைவர்கள் யாரும் பிரசாரத்திற்கு வரவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாகவும் அதை தொடர்ந்து மாலையில் தூத்துக்குடியில் ஒரே மேடையில் ராகுல் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ராகுலின் வருகை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிச்சயம் இறுதி கட்டத்தில் ஒன்றிரண்டு நாட்கள் அவர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம் நடத்த ஆலோசித்து வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் இன்று வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். இறுதி கட்டத்திலாவது அவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.