

சென்னை:
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில், நாளை (சனிக்கிழமை) ராகுல்காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால், அது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் உறுதி செய்யப்படவில்லை.
இந்தநிலையில் ராகுல்காந்தியின் பயணத்திட்டத்தை காங்கிரஸ் வட்டாரம் நேற்று உறுதி செய்தது. ராகுல்காந்தியின் நாளைய பயணத்திட்டம் வருமாறு:-
நாளை காலை 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் ராகுல்காந்தி காலை 11.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு காலை 11.45 மணிக்கு சென்றடைகிறார். பொன்னேரி தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காலை 11.55 மணி முதல் நண்பகல் 12.40 மணி வரை பங்கேற்கிறார்.
பின்னர், பொன்னேரியில் இருந்து நண்பகல் 12.50 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு சோளிங்கர் சென்றடைகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் மதியம் 1.25 மணி முதல் பிற்பகல் 2.10 மணி வரை பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து சோளிங்கரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 3.45 மணிக்கு திருச்சியை சென்றடைகிறார்.
திருச்சியில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 4.05 மணிக்கு துறையூர் சென்றடைகிறார். மாலை 4.15 மணி முதல் மாலை 5 மணி வரை துறையூரில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், மாலை 5.10 மணிக்கு துறையூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு திருச்சி சென்றடைகிறார். திருச்சியில் இருந்து மாலை 5.40 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.
அதைத்தொடர்ந்து மீண்டும் வருகிற 20-ந் தேதி தமிழகம் வரும் ராகுல்காந்தி நாங்குநேரி,ஸ்ரீவைகுண்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மேடை ஏறாத ராகுல் காந்தி நாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலினுடன் பிரசாரம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.