

தவெக ஆட்சி அமையக் கூடாது என்ற நோக்கத்துடன் செயல்படும் பாஜக, ஆளுநரைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“2025 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களில் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 11:00 மணிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக அண்ண சாலை, தாராப்பூர் டவர் அருகில் நாளை காலை 11:00 மணியளவில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டமன்ற இந்நாள், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள்.
நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகளை tamilnadu.congress@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.