பொள்ளாச்சி வழக்கு: யார் வெட்கித் தலை குனிய வேண்டும்? - முதலமைச்சருக்கு இ.பி.எஸ். சரமாரி கேள்வி

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி வழக்கு: யார் வெட்கித் தலை குனிய வேண்டும்? - முதலமைச்சருக்கு இ.பி.எஸ். சரமாரி கேள்வி
Published on

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்" என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து முதலமைச்சரின் பதிவை பகிர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில், "அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது.

வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் மு.க.ஸ்டாலின்! யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

யார் அந்த SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க ,மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.

இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!" என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com