TN Assembly Election| விஜய்க்கு எதிராக போராட்டம்: நடிகை ஜூலி மீது வழக்கு

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிடித்திருந்த பதாகையில் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
TN Assembly Election| விஜய்க்கு எதிராக போராட்டம்: நடிகை ஜூலி மீது வழக்கு
Published on

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமான சின்னத்திரை நடிகை ஜூலி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு எதிராக தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவரது இந்த வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூர் தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட ஜூலி விஜய்யை விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரையில் ஜூலி நேற்று திடீரென அனுமதியின்றி போராட்டம் நடத்தினார். ஒரு கையில் தி.மு.க.வுக்கு ஆதரவான பேனரையும், இன்னொரு கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிர்ப்பான பேனரையும் ஜூலி பிடித்திருந்தார். அவருடன் 3 பேரும் போராட்டத்தில் பங்கேற்றனர். அவ்வையார் சிலை பின்புறம் சர்வீஸ் ரோட்டில் ஜூலி சிறிது நேரம் போராட்டம் நடத்தினார்.

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிடித்திருந்த பதாகையில் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இன்னொரு பதாகையில் அணில் படம் பொறிக்கப்பட்டு அதன் மீது எக்ஸ் சிம்பல் இடம்பெற்று இருந்தது. பெண்களுக்கு இவர்களால் பாதுகாப்பு இல்லை என்று அதில் வாசகம் இடம் பெற்று இருந்தது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் மெரினா போலீசார் விரைந்து சென்று ஜூலியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் அனுமதியின்றி இது போன்று பொது வெளியில் போராட்டம் நடத்தக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர்.

தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்ற பிறகு தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவரிடம் போலீசார் அறிவுறுத்தினார்கள். பின்னர் ஜூலியிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஜூலி உள்பட 4 பேர் மீது மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி பிரசாரம் செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com