

சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது.
சபாநாயகர் தேர்தலில் ஆளும் கட்சியான த.வெ.க. சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார். சட்டசபை துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துரை தெரிவித்தனர்.
பாமக எம்எல்ஏ சவுமியா வாழ்த்து தெரிவித்து பேசுகையில்,
சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபடுபவர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். சமூக நீதியின் பின்னணியில் வளர்ந்த அவைத்தலைவர், துணைத்தலைவர் நேர்மையாக பேரவையை நடத்துவார்கள்.
இந்த சட்டசபையில் பணியாற்றுவதற்கு எனக்கு பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.
ஆரோக்கியமான விவாதங்கள் நடந்த சட்டமன்றம் தமிழ்நாடு சட்டமன்றம், ஆக்கப்பூர்வ விவாதங்கள் தேவை.
பாமக எம்எல்ஏக்கள் பேரவையில் பேசுவதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிக நேரம் தருவார் என நம்புகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இந்த நேரத்தில் நன்றி என்று அவர் கூறினார்.