

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக தோல்விக்கு பென் நிறுவனம் காரணமா அல்லது உதயநிதி காரணமா என நடக்கும் விவாதத்தை மறைக்க காங்கிரஸ் மீது பழி போடுகிறது திமுக.
கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக எந்த திசையில் செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். உண்மையான திமுக-காரர்கள் வீட்டில் இருக்கிறார்கள். வாடகைக்கு ஆட்களை அழைத்து வந்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். மே 4-ம் தேதி திமுக - அதிமுக கூட்டணி அமைக்க பேச்சு நடத்தியதால் நாங்கள் திமுக தலைவரை பார்க்க செல்லவில்லை.
உதயநிதி பாஜகவுடன் அண்டர் டீலிங்கில் இருப்பதை தோலுரித்து காட்டுவோம். விஜய் ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சியின் முக்கிய புள்ளியாக உதயநிதி இருந்தார். திமுகவால் காங்கிரசும் தோற்று 18 எம்எல்ஏக்களில் இருந்து 5 ஆக குறைந்து விட்டோம். சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்து விட்டோம். வரும் காலங்களில் உதயநிதி தலைமையில் திமுக மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும்.
கூட்டணி ஆட்சியும், நேர்மையான ஆட்சியும் காங்கிரஸின் இரு கண்கள். முதல்வர் விஜய் - ராகுல் காந்தி இடையிலான நல்ல நட்பு அனைவரும் அறிந்தது. இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்.
நெடுஞ்சாலைத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறைகளில் இருந்த 36 சதவிகித கமிஷன், பத்திரப்பதிவு செய்ய ஒரு ஏக்கருக்கு திமுக பெற்ற ரூ.7 லட்சம் நன்கொடை ஆகியவை தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதே போல் பல துறைகளில் ஊழல் குறைந்து வருகிறது. திமுக வாங்கிய கமிஷனை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட்டணி தர்மத்திற்காக அதை வெளியில் சொல்லவில்லை.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.