

கடந்த திமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தினசரி 60,000க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட விமான போக்குவரத்து நடந்து வருகிறது.
ஆனால் விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பதால் நெருக்கடியை சமாளிக்க பரந்தூர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஏரோட்ரோபோலிஸ்
மேலும் பரந்தூர் விமான நிலையத்துடன் அதனை சுற்றி நவீன சரக்குக் கிடங்குகள், ஏற்றுமதி, இறக்குமதி மையங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் அடங்கிய 'ஏரோட்ரோபோலிஸ்' நகரம் ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டது.
இதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது.
இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்காக ஏற்கனவே 3,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 1,700 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசியல்
ஆனால் பரந்தூர் மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர். 2 ஆண்டுகள் முன் கட்சி தொடங்கிய விஜய், தனது முதல் அரசியல் செயல்பாடாக பரந்தூர் சென்று அம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பரந்தூரில் விமான நிலையம் வராது என்ற உறுதியை விவசாயிகளுக்கு விஜய் கொடுத்தார்.
சிப்காட்
தற்போது விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக புதிய அரசு மேற்கொண்ட ஆலோசனையில், கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அவசியம் குறித்து விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.
விமான நிலைய ஆணையம்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, விமான நிலைய ஆணையம் ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையை விரைவில் முதல்வர் விஜய்யிடம் அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர்.
அறிக்கை குறித்து பேசிய ஆணைய அதிகாரிகள், சென்னையில் 2வது விமான நிலையம் என்பது காலத்தின் கட்டாயம். அதற்காகவே பரந்தூர் விமான நிலையத்தை பரிந்துரைத்துள்ளோம். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியும்.
அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான நில அமைப்பியல், சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் போக்குவரத்து இணைப்பு குறித்த ஆய்வுகள் அனைத்தையும் முடித்து அறிக்கை தயாரித்துள்ளோம்.
விமான நிலையத்தை சுற்றி உருவாக உள்ள ஏரோட்ரோபோலிஸ் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இந்த திட்டம் தொடர்பாக விரைவில் முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.