

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவரது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
“வரும் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.
இரண்டு வாரத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். எடப்பாடியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார். அது உறுதி. அவர் வந்தால்தான் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
அனைத்து தாய்மார்கள், பெண்கள், பெற்றோர்களுக்கும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும்.
ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபோது தமிழ்நாட்டில் அவர் செய்ததை வைத்து வாக்கு கேட்டார், எதுவும் எடுபடவில்லை. ஏனென்றால் எதுவும் செய்யவில்லை. அதன்பிறகு பாஜக வந்துவிடும் என்று ஒரு பொய் சொல்லி வாக்கு கேட்டார். அதுவும் எடுபடவில்லை.
அதன்பிறகு, எடப்பாடியாரையும் என்னையும் தனிநபர் விமர்சனம் செய்து கொச்சையாகப் பேசினார். இப்போது அதுவும் எடுபடவில்லை. அதனால் ஸ்டாலின் எந்த அளவுக்கு இறங்கிவிட்டார் தெரியுமா? நான் ஆட்சிக்கு வந்தால் 8000 ரூபாய் கூப்பன் தருகிறேன் என்கிறார். இவ்வளவு தரம் கெட்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
ஸ்டாலின் கடந்த ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கவில்லை. . ஆனால் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆட்சிக்காலத்தில 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தார். ஒரு மின்சாரத் திட்டம் கூட ஸ்டாலின் கொண்டு வரவில்லை. ஒரு பள்ளிக்கூடம் கூட ஸ்டாலின் புதிதாகத் தொடங்கவில்லை.
ஆனால் எடப்பாடியார் 3000 பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். 280 கல்லூரிகளை தொடங்கினார். ஒரு விவசாயியை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்க வேண்டும்.
இன்னும் இரண்டே வாரம், மே மாதம் 4ம் தேதி ரிசல்ட், மே மாதம் 5ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்கப் போகிறார். பதவியேற்றதும் விவசாயிகளுக்கு நெல் ஒரு குவிண்டாலுக்கு 3500 ரூபாய் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.
பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். கடந்த ஓராண்டு காலம் நடந்த நிகழ்வுகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். இந்த நிகழ்வுகளுக்கு காரணம் ஸ்டாலினும், அவருடைய மருமகனும்தான். நம்மை பலவீனப்படுத்த வேண்டும், பிரச்சினை உருவாக்க வேண்டும், இந்த கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் அந்த எண்ணத்தில்தான் செய்தனர்.
ஆனால், எதுவும் எடுபடப்போவது கிடையாது. உறுதியாக நம் கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற இருக்கிறது. சூழ்ச்சியான மோசடியான திமுக ஆட்சியை விரட்டி அடியுங்கள். இப்போது ஒன்றைத்தான் நம்புகிறார்கள். திமுக ஆட்சியை அகற்றுங்கள். அவர்கள் ஆளத் தகுதியில்லாதவர்கள். நேர்மையற்றவர்கள், திறமையற்றவர்கள், நாணயமற்றவர்கள்.
இப்படி ஒரு ஆட்சி வேண்டாம். திமுக ஆட்சி தோல்வியடைந்துவிட்டது. நம் எடப்பாடி பழனிசாமி அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குங்கள்.’ என தெரிவித்தார்.