மாற்று கட்சிகளில் இருந்து விலகல்: த.வெ.க.வில் இன்று 2500 பேர் இணைந்தனர்

இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாற்று கட்சிகளில் இருந்து விலகல்: த.வெ.க.வில் இன்று 2500 பேர் இணைந்தனர்
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய 2 கட்சிகளையும் வீழ்த்தி த.வெ.க. ஆட்சியை பிடித்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றி அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

செல்வாக்கு

சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகளும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் விஜய் இடம் அளித்து இருப்பது அவரது செயல்பாடுகள் மீது எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் செல்வாக்கை பெற்று இருப்பது மற்ற அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

2500 பேர் இணைப்பு

இதை தொடர்ந்து மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி த.வெ.க.வில் அணி அணியாக இணைந்து வருகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க. வில் இணைந்துள்ள நிலையில் அந்த கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து சேர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று 2500 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அமைச்சர்கள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இணைப்பு விழா இன்று நடைபெற்றது. த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் முக்கிய பிரமுகர்கள் இன்று த.வெ.க.வில் சேர்ந்தார்கள். இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட் ரமணன் ஆகியோரும் கலந்து கொண்ட னர்.

இந்த இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் அந்த கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

அ.தி.மு.க.வில் பணியாற்றி வந்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் த.வெ.க.வில் இன்று சேர்ந்துள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.கே. சிவசாமி (அருப்புக்கோட்டை), எம்.ஜி.எம். சுப்பிரமணி (திருவையாறு), சாந்தி ராமு (குன்னூர்), டாக்டர். வீரபாண்டியன் (செங்கம்) ஆகியோரும் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான வெங்கடேசன், சென்னை வளசரவாக்கம் நகராட்சி முன்னாள் தலைவர் இ.சி. சேகர், முன்னாள் தாட்கோ சேர்மன் கலைச்செல்வன், ஓய்வுபெற்ற கூடுதல் டி.ஜி.பி. ராஜா ஆகியோரும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ.

கம்பம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வான ஜெகநாத் மிஸ்ரா நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியும் நடத்தி வந்தார். சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன நிலையில் இன்று அவர் தனது கட்சியையும் த.வெ.க.வுடன் இணைத்துக் கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com