

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, எஸ். பாறைபட்டியைச் சேர்ந்தவர் மலர்க்கண்ணன் மகன் அருண்பாண்டியன் (வயது 34). இவர் கடந்த மார்ச் 19-ம் தேதி திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்த அவர் கடந்த 9 நாட்களாக தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
சோகத்திலும் துணிச்சலான முடிவெடுத்த அருண்பாண்டியனின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி அறுவை சிகிச்சை மூலம் 5 வகையான உறுப்புகள் எடுக்கப்பட்டு கல்லீரல் மதுரை பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, இடது சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, வலது சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனை, கண் கருவிழி மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தோல் மதுரை கிரேஸ் கென்னட் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.
இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஸ்ரீ சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அருண்பாண்டியனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 6 நபர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 2026-ம் ஆண்டில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடைபெறும் 2-வது உடல் உறுப்பு தானம் இது என்று தெரிவித்தார்.