

கோடை கால கூட்ட நெரிசலை குறைக்க சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் தூத்துக்குடி - தாம்பரம், எழும்பூர் - கன்னியாகுமரி, தாம்பரம் - செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் 20,27 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06018) அடுத்தநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து 21,28 ஆகிய தேதிகளில் மதியம் 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06017) அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து 22-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06045) அடுத்தநாள் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து 26-ந்தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06046) அடுத்தநாள் காலை 11.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இதேபோல, தாம்பரத்தில் இருந்து 22-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06089) அடுத்தநாள் காலை 5.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து 23-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06090) அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வந்தடையும்.
மேலும், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 22-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06023) அதேநாள் இரவு 11.30 மணிக்கு கோவை மாவட்டம் போத்தனூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக போத்தனூரில் இருந்து 23-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06024) அடுத்தநாள் காலை 8.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். போத்தனூரில் இருந்து 21,22,25,26 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயிலானது (06028) அதேநாள் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும். அதே நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06027) அடுத்தநாள் காலை 4 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையம் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.