வெளிநாட்டு குடியுரிமை பெற்று சட்டசபை தேர்தலில் சட்ட விரோதமாக வாக்களித்த மேலும் ஒருவர் கைது

இந்தியரான ஆபிரகாம், சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை குடியுரிமை பெற்று தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவது தெரியவந்தது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்று சட்டசபை தேர்தலில் சட்ட விரோதமாக  வாக்களித்த மேலும் ஒருவர் கைது
Published on

வெளிநாட்டு குடியுரிமை பெற்று தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வாக்களித்ததாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சென்னையில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆபிரகாம் (வயது 65) என்பவர் தோகா வழியாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு வந்தார். அவர் இலங்கை குடியுரிமை பெற்றவர். இதனால் அவர் இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தார். அவருடைய கை விரல்களை ஆய்வு செய்தபோது இடதுகை ஆள்காட்டி விரலில், தேர்தலில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்ததை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவரை நிறுத்தி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்தியரான ஆபிரகாம், சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை குடியுரிமை பெற்று தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவது தெரியவந்தது. சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் சொந்த ஊர் வந்தார். அவருடைய சொந்த தொகுதியான அருப்புக்கோட்டை வாக்குச்சாவடியில், சட்டவிரோதமாக வாக்களித்துள்ளார். அதன் பின்பு இன்று ஆபிரகாம் தோகா வழியாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து ஆபிரகாம் பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து தனி அறையில் அடைத்து வைத்தனர். இவரை சென்னை மத்திய குற்றப்பி ரிவு போலீசில் ஒப்படைக்க, குடியுரிமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதோடு இவர் கைது செய்யப்பட்டுள்ள தகவலை, இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், குடியுரிமை அதிகாரிகள் தெரியப்படுத்தினர். இதை தொடர்ந்து கைதானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com