

நெம்மேலி 2-வது அலகு அடிக்கல் அகற்றப்பட்டதாக திமுக குற்றம்சாட்டியதையடுத்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006-ம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.
2021-ம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே, முதலமைச்சர் விஜய் வருகிறார் என்கிற காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை த.வெ.க. அரசு அகற்றியிருப்பதாக திமுக குற்றம்சாட்டி இருந்தது.
திமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததற்காக கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றப்படவில்லை என துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில்,
நெடுஞ்சாலை ஓரமாக வைக்கப்பட்ட கல்வெட்டு சேதமான நிலையில் 10 நாட்களாக பராமரிப்பு பணி நடைபெறுகிறது. சாலை ஓரமாக வைக்கப்பட்டதால் வாகனங்களின் அதிர்வின் காரணமாக கல்வெட்டு சேதமான நிலையில் 10 நாட்களாக சீரமைப்பு பணி நடைபெறுகிறது. பராமரிப்பு பணி மேற்கொண்டு எழுத்துகளுக்கு பாதிப்பு இல்லாமல் கல்வெட்டு பொருத்தும் பணி நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர்.