

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது இதையொட்டி வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களது வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் தபால் வாக்குகளை அதிகாரிகள் பெற்று வருகிறார்கள். காரைக்குடி களவாய் பொட்டல் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 90). இவரது மனைவி சீதை அம்மாள். வயது மூப்பு காரணமாக இவர்கள் 2 பேரும் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி நேற்று தபால் வாக்கு பெற ராஜா மணி வீட்டுக்கு வந்தனர். அப்போது வாக்கு செலுத்தும் போது உறவினர்கள், சிறுவர்கள் என எல்லாரையும் வெளியேற்றியதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ராஜாமணி விஜயின் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அவரின் விருப்பத்திற்கு மாறாக தேர்தல் அதிகாரி கை சின்னத்திற்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த ராஜா மணியின் உறவினர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் மோசடி குறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ் புனியா மற்றும் வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த காரைக்குடி த.வெ.க. வேட்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து முதியோரின் விருப்பத்திற்கு மாறாக வாக்கை செலுத்திய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு தேவகோட்டை கோட்டாட்சியர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதை கண்டித்து த.வெ.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் நடத்தும் அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாகன சோதனை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முன்னேற்பாடு பணிகள் போன்றவை தீவிரபடுத்தப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக் குறியாக்கும் வகையில் காரைக்குடியில் முதியவரின் விருப்பத்திற்கு மாறாக தேர்தல் அதிகாரி தனக்கு பிடித்த சின்னத்திற்கு வாக்கு அளித்திருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டர்ருமான பொற்கொடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.