23-ந்தேதி சட்டசபை தேர்தல்: ஓட்டு போட சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 21, 22-ந்தேதி சிறப்பு பஸ்கள் | TN Election 2026

23-ந்தேதி அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
23-ந்தேதி சட்டசபை தேர்தல்: ஓட்டு போட சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 21, 22-ந்தேதி சிறப்பு பஸ்கள் | TN Election 2026
Published on

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக முழுவதும் செய்து வருகிறது.

மக்கள் கூட கூடிய பொது இடங்கள், பூங்காக்கள், பஸ் நிலையம், கடற்கரை, மால்கள் உள்ளிட்ட இடங்களில் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு வகையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இது தவிர 23-ந்தேதி அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து உள்ளது. இதனால் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் தயாராகி வருகிறார்கள்.

குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கி வசிக்கும் தனியார் ஊழியர்கள் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வருகிற 21 மற்றும் 22-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நீண்ட தூரம் செல்லக்கூடிய பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் 21, 22 மற்றும் 23-ந்தேதி மதியம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகள் மற்றும் வட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தேர்தல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பொது மக்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக நீண்ட தூரம் செல்லக்கூடிய பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com