

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.
தேர்தலுக்கான 164 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளை காண்போம்.
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 19 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்புவரை விரிவுப்படுத்தப்படும்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர் பொறுத்தாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.
உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்படி மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500ஆக உயர்த்தி வழங்கப்படும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4500 ரூபாயாக உயர்த்ததி வழங்கப்படும்.
பால் கொள்முதல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தி வழங்ககப்படும்.
முதியோர் உதவித்தொகை ரூ.1200லிருந்து ரூ.2000மாக உயர்த்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத்தொகை, ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்.
மீன்பிடி குறைவுக்கால சிறப்பு நிவாரணத்தொகை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
அன்னை தமிழைப் போற்ற மொழி வல்லுநர்களை கொண்டு செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழுவால் உருவான அறிக்கையை நாடு முழுவதும் விவாத பொருளாக்கி மாநில அரசுகளின் உரிமையை நிலைநாட்டும் அனைத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
சுய உதவி குழுக்களில் இருக்கும் பெண்கள் தொழில்முனைவோராக முன்னேறும் வகையில் மானியத்துடன் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும்.
பேரிடர் கால இழப்பீடாக இறவை பாசனப்பயிர்கள் மற்றும் நெல்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரமாகவும், நீண்டகால பயிர்களுக்கு ரூ.27 ஆயிரமாகவும், மானாவாரி பயிர்களுக்கு ரூ. 12 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்ககபடும்.
மாவட்டம் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
எட்டாவது ஊதியக்குழு அறிக்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியதும் அதனை மாநில அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்த குழு அமைக்கப்படும்.
அரசு அமைப்புகளில் ஏற்படும் 1 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் கால தாமதமின்றி நிரப்பப்படும்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் உரியநேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.