

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நிலையில் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி விதிகளை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட வேட்புமனு வழிகாட்டி விதிகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொது விடுமுறை நாட்களிலும், மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள், அரசால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்கள் என்பதால், எந்தவொரு வேட்புமனுவையும் தேர்தல் நடத்தும் அதிகாரி பெறக்கூடாது. மற்ற சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தால், அன்றும் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாது. உள்ளூர் விடுமுறை எதுவும் பொது விடுமுறை ஆகாது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சி வேட்பாளராக இருந்தால் அவரை அவர் போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் முன்மொழிய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர் அல்லது சுயேட்சை வேட்பாளர் என்றால் அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் அவரை முன்மொழிய வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கலின் போது 360 கோணத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இருக்கும். சி.சி.டி.வி.இல்லாத நிலையில் வீடியோ பதிவு செய்யப்படும்.
பிற்பகல் 3 மணிக்கு பிறகு யாரும் அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது. தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியின் கையொப்பமிட்ட சீட்டு, அறைக்குள் இருக்கும் வேட்பாளருக்கு வழங்கப்படும்.
மத்திய அரசு அல்லது மாநில அரசுப் பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர், நீக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பினால், முதலில் அவர் தேர்தல் கமிஷனை அணுக வேண்டும். ஊழல் அல்லது அரச துரோக குற்றங்களுக்காக பணிநீக்கம் செய்யப்படவில்லை என்பதற்கான சான்றிதழை பெற வேண்டும். அந்த சான்றிதழுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்றால், அவர் வாக்காளராக இருக்கும் பட்டியலின் நகலை கொடுக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கலுக்காக நேரில் வரும் வேட்பாளருடன் 3 கார்கள் வரலாம். தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அந்த வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
2 தொகுதிகளுக்கு மேல் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. 2-க்கும் மேலாக தாக்கல் செய்யப்படும் அனைத்து வேட்புமனுக்களுக்கும் நிராகரிக்கப்படும்.
டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வேட்பாளர்கள் அதில் பாதி தொகையை செலுத்தினால் போதும். வேட்புமனு தாக்கல் செய்யும்போது அளிக்கப்படும் உறுதிமொழியை வாசிக்க வேண்டும்.
https://suvidha.eci.gov.in என்ற இணையதளம் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கான 'விண்டோஸ்' 30-ந்தேதி காலை 11 மணிக்குதான் திறக்கும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, நேரில் வந்து வேட்புமனுவை சமர்ப்பிக்கும் நாளையும் அதில் குறிப்பிட வேண்டும்.
நெட் பேங்கிங் மூலம் டெபாசிட் பணத்தை செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட வேட்பாளர்தான் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதை நிரூபிப்பதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு அந்த வேட்பாளர் அல்லது அவரை முன்மொழிந்தவர் நேரில் வந்து, 'கியூஆர் கோட்' உடனான ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலை கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.