

வங்கக்கடலில் வடக்கு ஒடிஷா கடற்கரையை ஒட்டி புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு வங்கக்கடலில் உருவாகும் முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். இந்தத் தாழ்வு நிலையானது அடுத்த 2 முதல் 3 நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் கனமழைக்கான வாய்ப்புகள் குறைவு என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். கடல் பகுதிகளைப் பொறுத்தவரை, வங்கக்கடலின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும்.
இதனால் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.