

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றன.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்துகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களில் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில், சுமார் 5,500 மையங்களில் தேர்வு நடந்தது.
சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 9.47 லட்சம் மாணவர்கள், 13.33 லட்சம் மாணவிகள் என மொத்தம் 22.80 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் இன்று தேர்வை எழுதினார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
ஆள்மாறாட்டத்தை தடுக்கும் விதமாக, ‘நீட் தேர்வு நடைபெறும் மே 3-ந் தேதி மற்றும் அதற்கு முந்தைய நாளான 2-ந்தேதி ஆகிய 2 நாட்களும் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டாம். அத்தியாவசிய காரணங்கள் இருந்தால் மட்டும் விலக்கு அளிக்கலாம்’ என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியது.
அதன்படி, மருத்துவ மாணவர்களுக்கு நேற்று விடுமுறை வழங்கப்படவில்லை. இன்றும் அனைத்து மாணவர்களும் கல்லூரிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள் தண்ணீர் தெளிவாக தெரியும் வகையிலான குடிநீர் பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்கள் மற்றும் பொருட்களை அணியவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
சாதாரண ஆடைகளை அணியவும், முழுக்கை ஆடைகள் அல்லது கம்பளி ஆடை அணியவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. முறையான சோதனைக்கு ஒத்துழைக்கும் விதமாக, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர்.
தேர்வர்கள் உயரம் குறைந்த, சாதாரண காலணிகளை அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. உயரமான காலணிகள் மற்றும் கனமான அணிகலன்கள் அணிய தடைவிதிக்கப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு பிறகு வந்தால் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவ-மாணவிகள் அதற்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர். நீட் தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட தேசிய தேர்வுகள் முகமை திட்டமிடப்பட்டுள்ளது.