ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு- அண்ணாமலைக்கு ஆதரவு இல்லை என்று தெளிவுபடுத்தியதாக தகவல்

சந்திப்பின் போது பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால சாதனை பற்றிய தமிழ் மற்றும் ஆங்கில தொகுப்பை ரஜினியிடம் வழங்கினார்கள்.
ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு- அண்ணாமலைக்கு ஆதரவு இல்லை என்று தெளிவுபடுத்தியதாக தகவல்
Published on

தமிழக பா.ஜ.க.வில் இருந்து வெளியேறி அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார். அவரது இயக்கத்தில் சுமார் 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள். அண்ணாமலை தனியாக சென்றதால் பா.ஜ.க.வில் இருந்து தொண்டர்கள் பலர் அவர் பக்கம் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியுடன் சந்திப்பு

அண்ணாமலையின் இயக்கத்துக்கு ரஜினியின் ஆதரவு கிடைக்கும் என்று பேசப்படுகிறது. இதற்கிடையில் ரஜினியின் பெயரையோ, படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்த அனுமதி இல்லை என்று ரஜினி தலைமை ரசிகர்மன்றம் சார்பில் சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினியை சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால சாதனை பற்றிய தமிழ் மற்றும் ஆங்கில தொகுப்பை ரஜினியிடம் வழங்கினார்கள். சந்திப்பு முடிந்து வெளியே வந்த நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றார். ஆனால் இந்த சந்திப்பின் போது பல்வேறு அரசியல் நிலவரங்கள் பற்றி பேசி உள்ளார்கள். அப்போது த.வெ.க.வின் வெற்றி, அண்ணாமலையின் புதிய இயக்கம் பற்றியெல்லாம் விவாதித்து இருக்கிறார்கள்.

பா.ஜ.க.வில் இருந்த போது கட்சி அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டது பற்றி விரிவாக எடுத்து கூறியிருக்கிறார்கள். இந்த உரையாடலின் போது அண்ணாமலைக்கு ரஜினி ஆதரவு கொடுப்பார் என்று பேசப்படுவது பற்றியும் பேசி இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் தனது ஆதரவு இல்லை என்பதை ரஜினி தெளிவுபடுத்தியதாகவும் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com