

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 35). இவரது மனைவி நிஷாந்தினி(26). இவர்களது மகள் கீர்த்திஷா(9). கருத்து வேறுபாடு காரணமாக நிஷாந்தினி தனது கணவரை பிரிந்து, தனது தாய் அழகேஸ்வரி வீடான காரை சமத்துவபுரத்தில் மகளுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை கீர்த்திஷாவை காரை அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்ற நிஷாந்தினி, சாப்பிட்டு தூங்கிய கீர்த்திஷா மீண்டும் எழுந்திருக்காமல் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக டாக்டரிடம் தெரிவித்தார்.
அவரை பரிசோதித்த டாக்டர் கீர்த்திஷாவை கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக பாடாலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பாடாலூர் போலீசார் கீர்த்திஷா உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நிஷாந்தினியின் தாய்மாமன் லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து, நிஷாந்தினியை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், பெரம்பலூரில் உள்ள கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நிஷாந்தினிக்கு மணிகண்டன்(30) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும், கள்ளக்காதலுக்கு கீர்த்திஷா இடையூறாக இருந்ததால், அவரை நிஷாந்தினி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 9 வயது மகளை கொன்று தாய் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.