

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவிலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
இன்றைக்கு, நாங்கள் கொள்கைக் கூட்டணியோடு வந்து வாக்கு கேட்கிறோம். இன்னொரு பக்கம், பா.ஜ.க.வும் - அ.தி.மு.க.வும் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். ஆனால், அவர்களால் தமிழ்நாட்டிற்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார்கள் என்று ஏதாவது சொல்ல முடிகிறதா? எந்தக் கொள்கையை அடிப்படையாக வைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை இன்றைக்கு அவர்களுக்கு! கூட்டணியாக இருந்தாலும் அதில் பல பேர் பழனிசாமியை ஏற்றுக் கொள்ள மாட்டோம்; N.D.A.தான் எங்கள் முகம் என்று சொல்கிறார்கள்!
அந்தக் கூட்டணியின் லட்சணத்தை சொல்கிறேன் பாருங்கள். “பழனிசாமி ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்குகூட தகுதியில்லாதவர்” என்று அந்தக் கூட்டணியில் இருக்கும், அன்புமணி சொன்னார். அவர் இன்னும் நிறைய சொன்னார். நாகரிகம் கருதி அதையெல்லாம் நான் இந்த மேடையில் சொல்ல விரும்பவில்லை.
அதேபோன்று, பழனிசாமியின் திடீர் பங்காளியாகக் கூட்டு வைத்திருக்கும் டி.டி.வி. தினகரன், “பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதை, நான் விரும்பவில்லை. வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். அதைவிட தூக்கில் தொங்கிவிடுவோம்” என்று சொன்னார்.
பா.ஜ.க.வில் இருப்பவர்கள் இன்னும் மோசமாகப் பேசினார்கள். இத்தனை முரண்பாடுகளைக் கொண்ட இவர்கள் ஊழலால் ஒன்று சேர்ந்து, தங்களின் குடுமியை அமித் ஷாவிடம் கொடுத்து, N.D.A. டப்பா எஞ்சினில் இன்றைக்கு வந்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கிடைத்திருக்கும் பிரச்சார யுக்தி என்பது, அவதூறு பரப்புவது! பொய்களைப் பேசுவது! மக்களைப் பிளவுப்படுத்துவது!
ஆனால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது, கொள்கைகளையும் சாதனைகளையும் மேடைக்கு மேடை நெஞ்சை நிமிர்த்தி முழங்கும் கூட்டணி! தமிழ்நாட்டு நலன் என்ற ஒற்றைக் கோட்டில் நின்று, பா.ஜ.க. - அ.தி.மு.க. துரோகங்களை எதிர்க்கும் கூட்டணி! தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக, திட்டங்களையும் – சாதனைகளையும் செய்யும் கூட்டணி! அதனால்தான், திராவிட மாடல் அரசின் மாநில அளவிலான முத்திரைத் திட்டங்களை மட்டுமல்ல; ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் செய்திருக்கும் சாதனைகளைப் புள்ளிவிவரங்களுடன் இன்றைக்கு நம்மால் சொல்ல முடிகிறது!
தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டை எல்லா துறையிலும் படுகுழியில் தள்ளிய அ.தி.மு.க.வும், இந்தியாவை வரலாறு காணாத சரிவுக்கு கொண்டு சென்றுக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வும் சேர்ந்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு இந்த தேர்தலிலும் வழக்கம்போல் படுதோல்வியைதான் நீங்கள் பரிசாக தர வேண்டும்! டபுள் எஞ்சின் டப்பா எஞ்சினில் வரும் அவர்களை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவே கூடாது!
N.D.A. என்பது, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாத கூட்டணி! பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று ஏழைகளின் சுருக்குப் பையில் இருந்துகூட பணத்தை உருவினார்கள். மக்கள் எல்லோரும் ஏ.டி.எம். வாசலில் நின்றார்கள். கொரோனா காலத்தில் தட்டை தட்டுங்கள், மணியை ஆட்டுங்கள் என்று ஆக்சிஜன் சிலிண்டருக்கு வரிசையில் காத்துக்கிடக்க விட்டார்கள்.
இப்போது மக்கள் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சமையல் சிலிண்டருக்காக காக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி! இன்றைக்கு நாட்டு மக்கள் முழுவதும் ஒரே குரலில் என்ன கேட்கிறார்கள் என்றால், “மோடிஜி, வேர் ஈஸ் எல்.பி.ஜி”என்று கேட்கிறார்கள். இதற்கு பிரதமரிடம் பதில் இருக்கிறதா?
இந்த லட்சணத்தில் தொடர்ந்து சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை, டோல்கேட் கட்டணம் என்று உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஓட்டல்களுக்கும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் குடும்பங்களுக்கும் பிரதமர் என்ன பதில் சொல்லப் போகிறார்? தேர்தல் காலத்திலேயே இப்படி விலையை உயர்த்துகிறார்கள் என்றால் தேர்தல் முடிந்ததும் எப்படி உயர்த்துவார்கள்? அதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க தொடைநடுங்கி பழனிசாமிக்கு தெம்பு இருக்கிறதா? இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டுமா?
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.