மாணவர்கள் பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும்... அதுவே என் ஆசை: மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே உயர்கல்வியில் விளங்கக்கூடிய சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.எப்படிப்பட்ட சோதனையான காலத்திலும், எந்த சூழலிலும் நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு இதுபோன்ற விழுமியங்களை கைவிடாதீர்கள்.
மாணவர்கள் பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும்... அதுவே என் ஆசை: மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மியூசிக் அகாடமியில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

இந்தியாவிலேயே உயர்கல்வியில் விளங்கக்கூடிய சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதம், என்.ஐ.ஆர்.எப். தரவரிசை என்று பல குறியீடுகள் அதற்கு சான்றாக இருக்கிறது. இப்படி உயர்கல்வியில் தமிழ்நாடு சிறக்க காரணம் யார்? ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களில் எல்லாம் இன்றைக்கு படித்து முன்னேறி, உலகம் முழுவதும் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் யார்? திராவிட இயக்கம்!

உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும்! கொஞ்சம் அசந்தாலும், 'அவுட் டேட்' ஆகிவிடும் என்று சொல்லி விடுவார்கள்.

அதேபோல், லீடர்ஷிப் என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய பதவியோ, அவர்கள் சம்பளமோ கிடையாது! அவர்கள் உருவாக்கும் பாசிட்டிவ் தாக்கம்தான்! இந்த ஏ.ஐ. காலத்தில், உங்களின் நேர்மைதான் உங்கள் அறிவை அளவிட உதவும்! வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை மிகவும் அவசியம்! எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில பேசிக்ஸ் எப்போதும் மாறாது! அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்!

இந்த வாழ்க்கைப் பாடங்களை நீங்கள் ஒவ்வொருவரும் எப்போதும் மறக்காமல் இருக்க வேண்டும்! எப்படிப்பட்ட சோதனையான காலத்திலும், எந்த சூழலிலும் நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு இதுபோன்ற விழுமியங்களை கைவிடாதீர்கள். எங்கு சென்றாலும், துணிச்சலாக, புதுமையாக, தெளிவாக, அதே நேரத்தில், அன்போடும் அறத்தோடும் செயல்படுங்கள்.

இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் சி.இ.ஓ.-க்களாக நீங்கள் வர வேண்டும்! பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை, கனவு எல்லாம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com