

தஞ்சையில் இன்று போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போதைப்பொருளை ஒழிக்கக்கூடிய விழிப்புணர்வை இளைய சமுதாயம், மாணவர்களிடத்தில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விழிப்புணர்வு மூலம் இளைய சமுதாயம், மாணவ சமுதாயம் முற்றிலுமாக போதைப்பொருளிலிருந்து விலகியிருப்பதோடு, அதற்கான எதிர்ப்பு குரல் எடுப்பதையும் நோக்கமாக இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைகளின் தாயாக இருக்கக்கூடிய மதுப்பழக்கத்தை குறைத்திட வேண்டும் என்ற அடிப்படையிலே, புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 717 மதுக்கடைகளையும் மூடியிருக்கிறது. படிப்படியாக போதை முற்றிலும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாகும்.
மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவு வந்த பிறகு, மதச்சார்பற்ற கூட்டணியிலே அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் எல்லாம் நடக்கக்கூடிய நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்தோம். 108 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற, பெரும்பான்மையான அதிக இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என்று நாம் நினைத்தோம் . ஆனால் 118 என்ற எண்ணிக்கை இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை இருந்தது. தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் எந்தவிதமான அழைப்பும் விடுக்காமல் கவர்னர் இருந்தார் . இதனால் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது, கவர்னர் ஆட்சி அமல்படுத்தக்கூடிய ஒரு சதித்திட்டம் இருக்குமோ என்ற அடிப்படையில்தான் மே 9-ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் த.வெ.க ஆட்சி அமைய துணை நிற்போம் என்ற முடிவை தன்னிச்சையாக, அதுவும் வெளியிலிருந்து ஆதரவு, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம்.
சிறுபான்மையினர் துறையைப் பொறுத்தவரை, வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை, மதவழி சிறுபான்மையினராக இருக்கக்கூடிய ஆறு இனங்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் போன்ற ஆறு மத வழி சிறுபான்மை இனத்திற்கும், மொழிவழி சிறுபான்மை இனத்தவர்களுக்கும் சென்ற நிதிநிலை அறிக்கையை விட அதிகமான தொகையிலே நலத்திட்டங்களை, கல்வி உதவித்தொகைகளை, கடன் உதவி திட்டங்களை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலே அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். வரக்கூடிய நிதிநிலை அறிக்கையிலே அதற்கான அறிவிப்புகள் நிச்சயமாக வெளியிடப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பல்வேறு நிதிகளின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களும், மக்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யக்கூடிய பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஓரிருவர் செய்யக்கூடிய தவறுகளின் காரணமாக, இது போன்ற நடவடிக்கைகள் மற்ற சேவை நிறுவனங்களையும் பாதிக்கக்கூடியதாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.