

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அவருடன் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் ஆகியோரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமைச்சரிடம், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என , கண்ணீர் மல்க வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் சம்பத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர தமிழக அரசு தயாராக உள்ளது.
இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் தமிழகத்தில் இதுவே இறுதியாக இருக்க வேண்டும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்மாதிரியான கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும்.
மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'சிங்கப்பெண் திட்டம்' மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அதன் பிறகு அனைவருக்கும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு, குளங்கள், குட்டைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால், அவற்றை உடனடியாக கண்காணித்து, உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் விரைவில் உரிய நிவாரண உதவியை வழங்குவார் என்றும் அமைச்சர் சம்பத் உறுதியளித்தார்.