

சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர்.
அகில இந்திய செயலாளராக பல மாநிலங்களில் பொறுப்பு வகித்து செயல்பட்ட அனுபவம் கொண்டவர். அத்தகைய மூத்த தலைவரை நியமித்தது வரவேற்கத்தக்கது. அவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்த நிச்சயம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அனுபவம் வாய்ந்த அவர், அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார தலைவர்களைச் சந்தித்து கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஓர் அரசு கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டு, டெல்லிக்கான சிறப்பு பிரதிநிதியை நியமனம் செய்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கே அந்தப் பதவியை கொடுத்திருக்கலாம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஒரு அரசு ஒருவரை நியமித்த பிறகு, அதிலேயே குறைகளைத் தேடிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை.
ஒரு அரசு சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் பல மடங்கு உயரவேண்டும் என்பதே எனது விருப்பம். புதிதாக அமைந்துள்ள ஒரு அரசு மீது பழி சுமத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.
தொலைநோக்கு பார்வையோடுதான் நாம் எதையும் அணுகவேண்டும். மக்களின் நலனுக்காக அந்த அரசு மேற்கொள்ளும் பணிகளை வைத்தே அதை மதிப்பிட வேண்டும். எனவே டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் குறித்து பெரிதாக ஆராய்ந்து குறை கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தார்.