

திருச்சி:
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் மீண்டும் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் வெற்றி பெறும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு திருச்சி முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம், மக்களும் அதை தான் விரும்புகிறார்கள்.
திருச்சி மட்டுமல்ல திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள 41 தொகுதிகளிலும் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். பொதுமக்கள் தி.மு.க. அணிக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். இந்த ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட்டால் தி.மு.க. வெற்றி பெறுமா என்று கேட்கிறார்கள். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. யார் போட்டியிட்டாலும் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வெற்றி பெற வைப்போம்.
இந்த முறை தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் மகளிர் என பலருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மீதமுள்ள 34 தொகுதிகளிலும் அவர் சேர்த்தே கூறட்டும். 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால் அது நிறைவேறப் போவதில்லை. தி.மு.க. அணிதான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும்.
கூட்டணியில் யாரையும் விட்டுவிடாமல் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதலமைச்சருக்கு பெருமை தான். டெல்டா மாவட்டங்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் பாடுபடுவோம். திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிப்பது குறித்து நிதி நிலைக்கு ஏற்ப முடிவு எடுப்பார்கள் என்றார்.