கோடியில் புரள்பவருக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை காசாகத்தான் தெரியும்: குஷ்புவுக்கு அமைச்சர் கண்டனம்

நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
கோடியில் புரள்பவருக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை காசாகத்தான் தெரியும்: குஷ்புவுக்கு அமைச்சர் கண்டனம்
Published on

சென்னை:

சென்னை செங்குன்றத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜனதா நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:-

நடிகை குஷ்பு முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையை பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி உள்ளார்.

உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா?. அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும்.இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது.

இதனை சிலர், 'முதலமைச்சர் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்கிறார்கள்.

நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்.

இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com