கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் விஜய்

காயத்தையும் பொருட்படுத்தாது அடுத்தடுத்து 5 பயங்கரவாதிகளை மீனாட்சிசுந்தரம் சுட்டுக்கொன்றார்.
CM Vijay and Army soldier Meenakshi sundaram
Published on

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமையக்கவுண்டன் பட்டியை சேர்ந்த அய்யப்பன்-பழனிமணி தம்பதியின் மகன் மீனாட்சிசுந்தரம் (வயது 30). பி.எஸ்.சி. பட்டதாரியான இவருக்கு முத்தமிழ்ச்செல்வம் (25) என்ற மனைவியும், 1 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ராணுவ பணி

இவர் கடந்த 2017ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து ஜோத்பூர், லே உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்தார். கடந்த 2024ம் ஆண்டு பயங்கரவாதிகளை கண்டறிதல், அவர்களின் நடமாட்டத்தை தடுப்பது, என்கவுண்டர் செய்தல் ஆகிய பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் ‘ஆண்டி டெரரிஸ்ட் போர்ஸ்’ பிரிவில் நியமிக்கப்பட்ட இவரது திறமையை அறிந்த ராணுவ உயர் அதிகாரிகள் இவரை ஜம்மு காஷ்மீர் குல்ஹாம் மாவட்டத்தில் பணியமர்தினார். அங்கு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர்.

5 பேர் சுட்டுக்கொலை

இதில் மீனாட்சிசுந்தரம் சுட்டதில் ஒரு பயங்கரவாதி இறந்தான். மற்றொரு பயங்கரவாதி சுட்டதில் மீனாட்சிசுந்தரத்தின் முகத்தாடை கிழிந்தது. மேலும் வலது தோள்பட்டையிலும் குண்டு பாய்ந்தது. அந்த காயத்தையும் பொருட்படுத்தாது அடுத்தடுத்து 5 பயங்கரவாதிகளை மீனாட்சிசுந்தரம் சுட்டுக்கொன்றார். அவரது இந்த வீரதீர செயல்களை பாராட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு ராணுவத்தின் 2வது உயரிய விருதான ‘கீர்த்தி சக்ரா’ விருது வழங்கி கவுரவித்தார். விருதுபெற்ற மீனாட்சிசுந்தரம் சொந்த ஊருக்கு வந்தபோது அவருக்கு கிராமமே ஒன்று திரண்டு மலர்தூவி மேளதாளங்கள் முழங்கி வரவேற்றனர்.

முதலமைச்சர் பாராட்டு

இந்நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரத்தின் அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ராணுவ வீரரில் குழந்தையை முதலமைச்சர் விஜய் கொஞ்சி மகிழ்ந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com