Jana Nayagan | ஜன நாயகன் விவகாரம்: 6 பேர் சிக்கியது எப்படி? தமிழக காவல் துறை விளக்கம்

வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Jana Nayagan | ஜன நாயகன் விவகாரம்: 6 பேர் சிக்கியது எப்படி? தமிழக காவல் துறை விளக்கம்
Published on

ஜன நாயகன் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 300 விதிமீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பட்டு இருக்கின்றன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தமிழ் நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு இணையவழி குற்ற தடுப்பு பிரிவானது, பல டிஜிட்டல் தளங்களில் "ஜனநாயகன்" திரைப்படத்தின் அங்கீகரிக்கப்படாத இணைய கசிவு தொடர்பான புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக, மாநில சைபர் குற்ற விசாரணை மையத்தில் குற்ற எண். 47/2026 பாரதிய நியாயா சன்ஹிதா (பி. என். எஸ்) தகவல் தொழில்நுட்பச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம் மற்றும் சினிமாட்டோகிராப் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீறப்பட்ட URL களை அடையாளம் கண்டு தடுப்பது, டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு மற்றும் தொடர் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் விசாரணை மூலம் கண்டுபிடிப்பது போன்ற வழக்கின் பல்வேறு அம்சங்களைக் கையாள சைபர் குற்ற பிரிவில் பல சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

டிஜிட்டல் ஆதாரங்களின் விசாரணை மற்றும் பகுப்பாய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், கிளவுட் ஸ்டோரேஜ் தளங்கள் மூலம் பதிவேற்றுதல் மற்றும் டிரைவ் இணைப்புகளைப் பகிர்வதில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்ட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடமிருந்து டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

திருட்டு உள்ளடக்கம் பரவுவதைத் தடுக்க இணையவெளியில் தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, சுமார் 300 மீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் அடையாளம் காணுதல் மற்றும் நீக்குதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com