

முஸ்லீம் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்துவதே முற்றிலும் தவறானது என்பதை தவெக அரசு உணரவேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
“முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5%- இல் இருந்து 5%- ஆக உயர்த்த வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அதனை பரிசீலிக்கும் முன் தவெக அரசு முதலில் தெளிவுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே முஸ்லீம்களுக்கு இருக்கும் 3.5% இட ஒதுக்கீட்டால், பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் சிலர் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கும் நிலையில், மேலும் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது, பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தை மொத்தமாகக் குறைத்துவிடும்.
மதம் சார்ந்து எந்த ஒரு ஒதுக்கீடும் இருக்கக் கூடாது என அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள நிலையில், முஸ்லீம் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது எவ்வகையில் நியாயம்?
எனவே, முஸ்லீம் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்துவதே முற்றிலும் தவறானது என்பதை தவெக அரசு உணரவேண்டும்!
பிளவுவாத அரசியலுக்கு அடிபணிந்து, தமிழ்நாடு மக்களின் சமூகநீதியைச் சிதைக்கும் ஏதேனும் திட்டமிருந்தால் தவெக அரசு உடனடியாகக் கைவிடுவதோடு, அதனை பகிரங்கமான செய்தியாக வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.