ஆட்சி அமைக்க தீவிரம்- ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட விஜய்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
ஆட்சி அமைக்க தீவிரம்- ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட விஜய்
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் இமாலய வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த ஆதரவை யார்-யார் அளிக்கப்போகிறார்கள் என்பது அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் விஜய் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரியுள்ளார். இது தொடர்பாக தமிழக கவர்னருக்கு அவர் மெயில் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஆட்சி அமைப்பதற்கு தன்னை அழைக்க வேண்டும் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விஜய் தலைமையில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

த.வெ.க. கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர் அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் சிலைகளுக்கு விஜய் மாலை அணிவித்து விட்டு ஆலோசனையை தொடங்கினார்.

த.வெ.க. சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சராக) விஜய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து,

தமிழக வெற்றிக்கழகத்தின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆளுநரை சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நாளை சந்தித்து ஆட்சி அமைக்க த.வெ.க. தலைவர் விஜய் உரிமை கோருகிறார்.

இப்படி தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளில் விஜய்யும், தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com