

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வை தமிழக அரசு நடத்த உள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 45 வகையான தொழில்நுட்பப் பதவிகளில் காலியாக உள்ள 461 இடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதவிப் பொறியாளர் பணியிடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
27.05.2026 முதல் 25.06.2026 வரை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான TNPSC Portal அல்லது TNPSC Exams மூலம் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
இம்முறை தேர்வர்களின் வசதிக்காக ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கட்டணத்தை வழக்கமான நெட் பேங்கிங் அல்லது கார்டுகள் தவிர்த்து, கூகுள் பே, போன்பே, போன்ற UPI முறைகளைப் பயன்படுத்தியும் மிக எளிதாகச் செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
இது நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள் என்பதால், எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர், நேர்காணல் கிடையாது.
இத்தேர்விற்கான விரிவான பாடத்திட்டங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.