

சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2025-26-ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வே சார்பில் நவீன சிக்னல் சாதனங்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்கள் குறிப்பிட்ட நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும் போது, அடுத்த தண்டவாளச் சந்திப்புகளில் எந்தவகை சிக்னல் உள்ளது என்பதை ரெயில் ஓட்டுநர் முன்கூட்டியே அறியும் வகையிலான சிக்னல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வகை நவீன சாதனங்களால் ரெயில்கள் சீராக செல்வதுடன், குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட ரெயில் நிலையத்தை அடைய முடியும். இதேபோல, ரெயில்வே கடவுப் பாதைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கணினியுடன் இணைக்கப்பட்ட 'இண்டர்லாக்' முறை 12 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிட்டதைவிட கூடுதலாக 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அவசர காலத்துக்கு தேவைப்படும் சாதனங்களும் 19 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், ரெயில்வே கிராட்சிங்கில் ரெயில்கள் வருவதை அறிந்து முன்கூட்டியே மூடி பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
மேலும், தெற்கு ரெயில்வே மண்டலத்தில் தானியங்கி சிக்னலிங் முறையானது 73.7 கிலோ மீட்டர் நீளம் தண்டவாளத்தில் அமைக்கத் திட்டமிட்டு, தற்போது 70.5 கிலோ மீட்டர் தொலைவுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. பாம்பன் பாலத்தில் காற்று வேகத்தைக் கண்காணிக்கும் சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அதிகமாக காற்று வீசினால் ரெயில் இயக்கத்தை தானாகவே கட்டுப்படுத்தும் வசதி அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.