

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்தினாலும் கூட ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் நாளை (30-ந்தேதி) முதல் மே 2-ந்தேதி வரை இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்றும் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1, 2-ந் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் மே 2-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இந்த நாட்களில் வெப்ப நிலையும் ஈரப்பதமும் அதிகரிக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இது குறித்து வானிலை அதிகாரி கூறும்போது, வருகின்ற நாட்களில் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும். 4 மணிக்கு பிறகு தான் வெயில் படிப்படியாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.