

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலம் தொடங்கும் முன்பே மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயில் அதிகமாக கொளுத்தியது. மேலும் வெப்ப அலையும் வீசியது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இரவில் புழுக்கத்தால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் கடந்த 25 நாட்களாகவே கத்திரி வெயில் வாட்டி எடுத்தது. அக்னி நட்சத்திரத்தின் கடைசி நாளான நேற்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். வெப்பநிலை 106 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம். சென்னையிலும் வெயிலின் தாக்கம் 2 நாட்களுக்கு அதிகமாக இருக்கும். அதன்பிறகு வெயில் படிப்படியாக குறையும். ஜூன் மாதமும் வெயில் இருக்கும். ஆனால் தென்மேற்கு பருவ மழையும், வெயிலும் மாறி மாறி காணப்படும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்யும். தமிழகத்தில் சுமார் 6 சதவீதம் வரை பருவமழை குறைவாக பெய்ய வாய்ப்பு உள்ளது. மானாவாரி பயிர்களிடும் பகுதிகளிலும் பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.