

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே விஜய் மற்றும் தவெகவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என, காங்கிரஸ் கட்சியிடம் கூறியதாக அக்கட்சியின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாற்றத்தை விரும்பியதால் தமிழ்நாடு மக்கள் விஜய்யை தேர்ந்தெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களின் அதிகபட்ச ஆதரவே தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்நாடு மக்களின் ஒருமித்த கருத்தை, தாங்கள் மதிப்பதாகவும், கூட்டணி தொடர்பாக தவெக தரப்பில் இருந்து தனக்கு எந்தவொரு அழைப்பும் வரவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள வேறு யாரையாவது, த.வெ.க கட்சியினர் தொடர்பு கொண்டார்களா என்பதும் தனக்கு தெரியாது என்றும் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றது.
திமுக 53 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக பொறுப்பேற்க உள்ளது.
இதனிடையே பெரும்பான்மை பெற காங்கிரஸுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி வரும்நிலையில், கிரிஷ் சோடங்கரின் இந்த விளக்கம் வந்துள்ளது.