ரெயில் பயணத்தில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்?

கூடுதல் அனுமதியாக பயணிகள் கூடுதலாக 10 முதல் 15 கிலோ வரை விதிமுறைகளுக்குட்பட்டு எடுத்து செல்லலாம். இதற்கு சாதாரண உடைமைக் கட்டணத்தை போல் 1.5 மடங்கு செலுத்தவேண்டும்.
ரெயில் பயணத்தில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்?
Published on

அனைத்து தரப்பு மக்களுக்கும் உன்னத போக்குவரத்து சேவையை ரெயில்வேதான் வழங்கி வருகிறது. இந்த ரெயில் பயண அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. அப்படியான ரெயில் பயணத்தின்போது ஒரு ரெயில் பயணி எவ்வளவு உடைமைகள் (லக்கேஜ்) கொண்டு செல்லலாம்? என்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு வீடியோவை தெற்கு ரெயில்வே தன்னுடைய 'எக்ஸ்' தளப் பக்கத்தில் இந்திய ரெயில்வேயின் உடைமை விதிகளை வெளியிட்டு இருக்கிறது.

அந்த சமூக வலைதளப்பக்கத்தில், 'பயணத்திற்கு ரெடியா? லக்கேஜ் லிமிட் தெரியுமா? இந்திய ரெயில்வேயில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இலவச லக்கேஜ் அளவு உண்டு. கொஞ்சம் எக்ஸ்டிரா இருந்தால், சிறிய கட்டணம் செலுத்தி எடுத்துச்செல்லலாம். ஆனால், லிமிட்டை தாண்டினால் அபராதம் (பைன்) கட்டவேண்டி வரும். அளவோடு பேக் பண்ணுங்க. அசத்தலா டிராவல் பண்ணுங்க. ‘குறைவான லக்கேஜ்; நிறைவான பயணம்’ என்ற விழிப்புணர்வு வாசகத்தை பதிவு செய்து எவ்வளவு 'லக்கேஜ்' கொண்டு செல்லலாம் என்பது குறித்த வீடியோவையும் பகிர்ந்திருக்கிறது.

அந்த வீடியோவில், முதல் ஏ.சி. வகுப்பு பெட்டியில் ஒரு பயணி 70 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி.யில் 50 கிலோ வரையிலும், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 40 கிலோ வரையிலும், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு அமரும் வகையிலான பெட்டியில் 35 கிலோ வரையிலும் கொண்டு செல்லலாம்.

கூடுதல் அனுமதியாக பயணிகள் கூடுதலாக 10 முதல் 15 கிலோ வரை விதிமுறைகளுக்குட்பட்டு எடுத்து செல்லலாம். இதற்கு சாதாரண உடைமைக் கட்டணத்தை போல் 1.5 மடங்கு செலுத்தவேண்டும். இந்த கூடுதல் அனுமதிவரம்புக்குள் கொண்டுவரப்படும் உடைமைகளுக்கு அபராதம் வசூலிக்கப்படாது.

இந்த இலவச மற்றும் கூடுதல் அனுமதி வரம்பையும் தாண்டி உடைமைகளை எடுத்துச் சென்றாலோ அல்லது முன்பதிவு செய்யாமல் உடைமைகளை எடுத்துச் சென்றாலோ ரெயில்வே விதிகளின்படி அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் ரெயில்வே எச்சரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com