அத்தியாவசிய பணியில் இருக்கும் வாக்காளர்கள் தபால் ஓட்டு போடுவது எப்படி? தேர்தல் கமிஷன் விளக்கம்

அத்தியாவசிய பணியில் இருக்கும் வாக்காளர்கள் தபால் ஓட்டுகளை எப்படி அளிக்க வேண்டும்? என்பதற்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
அத்தியாவசிய பணியில் இருக்கும் வாக்காளர்கள் தபால் ஓட்டு போடுவது எப்படி? தேர்தல் கமிஷன் விளக்கம்
Published on

சென்னை:

இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சட்டமன்ற தேர்தலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், சேவை வாக்காளர்கள், தேர்தல் பணியில் உள்ள வாக்காளர்கள் ஆகியோர் தபால் ஓட்டு போட தேர்தல் கமிஷன் பல்வேறு வசதிகளை செய்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்கை செலுத்தலாம்.

இத்தகைய வாக்காளர்கள், விண்ணப்பப்படிவம் 12டி-யை பூர்த்தி செய்து, தேர்தல் அறிவிக்கை வெளியான (வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள்) 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்கு சேகரிக்கும் குழுக்கள். அந்த வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிப்பார்கள். இதற்கான கால அட்டவணை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.

தேர்தல் தேதியன்று அத்தியாவசியப் பணிகளில் இருக்கும் வாக்காளர்கள். தங்கள் துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மூலம் தபால் ஓட்டு வசதிக்கு விண்ணப்பிக்கலாம். தீயணைப்புத்துறை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவைகள், விமான போக்குவரத்து, அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட சில துறைகள் இந்த வசதியின் கீழ் வருகின்றன.வாக்குப்பதிவு நாளன்று செய்தி சேகரிப்புக்காக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவிய லாளர்களும் அத்தியாவசியப் பணிகளில் உள்ள 'வராத வாக்காளர்கள்' என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களும் தபால் வாக்கு வசதிக்கு தகுதியுடையவர்களாவர்.

தேர்தல் பணியில் இருக்கும் ஒரு வாக்காளர் தனது தபால் வாக்கைப் பெற்று, அதில் தனது வாக்கை பதிவு செய்து, அதற்கான வசதி அமைக்கப்பட்டுள்ள மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு வாக்காளர் முழுமையான ரகசியக்கடன் வாக்களிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேவை வாக்காளர்களுக்கு தபால் வாக்குகள், மின்னணு முறையில் அனுப்பப்படும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் இவை அனுப்பப்படும். இதற்கான தபால் செலவை சேவை வாக்காளர்கள் ஏற்க வேண்டியதில்லை. பதிவு செய்யப்பட்ட தபால் ஓட்டுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நாளான மே 4-ந் தேதியன்று காலை 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை சென்றடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com