

மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தது தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்ற பலர், தங்களுக்கு விதித்த தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.
அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர்களுக்கு கீழ்கோர்ட்டுகள் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது. மனுதாரர்கள் மீதான வழக்குகளை முறையாக விசாரித்து கீழ்கோர்ட்டுகள் தண்டனை விதித்து இருக்கின்றன.எனவே இந்த தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
இதன்மூலம் தமிழகம் முழுவதும் பதிவாகும் வழக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் இந்த 3 மாவட்டங்களில்தான் பதிவாகின்றன என்பது தெரியவருகிறது. இந்த வழக்குகளில் இருந்து சுமார் 5,603 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது கட்டுக்கோப்பான போதைப்பொருள் கடத்தல் தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன.
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், போதைப்பொருள் விழிப்புணர்வுகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது என்றும், போதைப்பொருட்களை அழிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவது என டி.ஜி.பி., உள்துறை அமைச்சகம் இணைந்து பல்வேறு சுற்றறிக்கைகளை வெளியிட்டு இருப்பதாகவும் அரசு வக்கீல் தெரிவித்து உள்ளார். போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை இந்த கோர்ட்டு பாரட்டுகிறது.
தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது நிறுத்தப்பட்டாலும், இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரிட்டு. அங்கிருந்து தமிழகத்திற்கு கடத்தி வருவது தெரியவந்து உள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பிரிவான போதைப்பொருள் தடுப்பு பிரிவை விட, உள்ளூர் போலீசாரே போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக அதிக வழக்குகளை பதிவு செய்கின்றனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தமிழகம் முழுவதும் 12 டி.எஸ்.பி.க்கள், 16 இன்ஸ்பெக்டர் கள் என மிகக்குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகளே உள்ளனர்.
எனவே போதைப்பொருள் தடுப்பு பிரிவில் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சைபர் கிரைம் பிரிவுகளை உருவாக்கி, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இணையதள தொடர்புகளை கண்காணிக்க வேண்டும். பஸ்கள், ரெயில் களில் அவ்வப்போது தீவிர சோதனைகளை நடத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உதவியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் காவல்துறை வெறும் கைது மற்றும் பறிமுதல் செய்வதோடு நிறுத்திக்கொள்கிறது. கடத்தலின் பின்னணியில் நடக்கும் பணப்பரிமாற்றம் மற்றும் சொத்துகளை கண்டறிவதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக 2023-24-ம் ஆண்டில் 72 வழக்குகளில் மட்டுமே நிதி தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
எனவே இனி பதிவாகும் அனைத்து போதைப்பொருள் தடுப்பு வழக்குகளிலும் குற்றவாளிகளின் சொத்துகளை கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண்டும். அதற்கான விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சந்தேகத்திற்கு உரிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். இதற்காக ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநில அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். வெறும் கைது நடவடிக்கையால் மட்டும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியாது. கடத்தல் கும்பலின் பொருளாதார அடித்தளத்தை தகர்த்தால் மட்டுமே போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.