

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வந்தது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள வேலஞ்சேரி, நல்லாட்டூர், கனகம்மாசத்திரம், மத்தூர், பெரியகடம்பூர், கே.ஜி.கண்டிகை, திருவாலங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளுமையான சூழல் நிலவியது. எனினும், சூறைக்காற்றின் வீரியத்தால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
திருத்தணி அமிர்தபுரம் அரசுப் பள்ளி அருகே பெய்த கனமழையின்போது வீசிய பலத்த காற்றினால், அங்கிருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. மரம் சாய்ந்ததில் அருகிலிருந்த 2 மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதேபோல், திருத்தணியை அடுத்த தெக்ளூர் பகுதியிலும் மின்கம் பம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்ததால், திருத்தணி பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெடும்பரம் அருகே சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், சாலையோரம் இரும்பு தகடுகளால் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி வந்தனர். நேற்று வீசிய பயங்கர சூறாவளி காற்றால் இந்த கூடாரத்தின் இரும்பு தகடுகள் பெயர்ந்து. நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களின் மீது பறந்து வந்து விழுந்தன. இதில் சாலையில் சென்ற 4 கார்களின் கண்ணாடிகள் உடைந்து தொறுங்கின. மேலும், இப்பகுதியில் அடுத்தடுத்து 8 மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால். சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
சூறைக்காற்றுடன் பெய்த மழையால் திருத்தணி, திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மின்சார சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் இருளில் மூழ்கினர்.
பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால், மின்சாரத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மின்தடை காரணமாக இரவு நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.